Friday, October 16, 2015

யார் இந்த வஹ்ஹாபிகள்? முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) (கி.பி 1702 -1792)

 இஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே (ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அவர்கள் பிறந்த காலப்பகுதி இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்கள் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

கப்றுகளை, குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததோடு மார்க்க அறிஞரான தனது தந்தையிடம் சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டார்கள்.

தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய சென்ற போது அங்கே ஒரு நிகழ்வை காண்கிறார். நான்கு மத்ஹபுகளுக்கும் தனி தனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு (ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹம்பலி)  தடவை நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும், ஹதீஜா (ரலி) அவர்களுக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன.

கல்வி கற்பதற்காக மதீனாவுக்கு சென்று சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கும், ஈராக்கிற்க்கும், லக்‌ஷா (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள். இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார்கள்.
  
தனது 25ஆவது வயதில் கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தை உயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத் (நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.

சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிருந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம், என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள்.

அதேபோன்று இறைவழியில் வீரமரணம் அடைந்த ஸாயித் இப்னு கத்தாப், மிரர் இப்னு அஸ்வர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி வணங்கிக் கொண்டிருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீருடைய 600 படைவீரர்களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாகளை உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள்.

இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சில காரணங்களால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல். அந்த ஆட்சியாளர், இமாமை பாதுகாப்புடன் அனுப்பிவைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அப்துல் வஹ்ஹாப்பை பற்றி கேள்விப்பட்ட இவர் அவரை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள் என்றதும் மன்னரும் அதற்கு சரி நான் உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

      இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய அனுமதி கொடுத்தார். ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடந்தது.

முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே சென்றார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, மக்களை எகத்துவ கொள்கையின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்தி முழு அரேபியாவிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது. சஹாபாக்கள் காலத்தில் எவ்வாறு இஸ்லாம் வேகமாக வளர்ச்சி பெற்றதோ அதுபோல் இமாமவர்களின் காலக்கட்டத்திலும் தூய இஸ்லாம் எழுச்சி பெற்றது. இறுதியாக, ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.

வஹ்ஹாபிய வளர்ச்சியை கண்ட அன்றைய வல்லரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், துருக்கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

 துருக்கிய ஆட்சியாளரும் அதனை ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்..

சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர் – ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்என்று எழுதுகிறார்.


இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment