Friday, July 17, 2015

சீன முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும்…!

   சீனாவின் வடமேற்கு எல்லைப் புற மாகாணமாக சிங்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் 2010 ஜூலை மாதம் 5 ஆம் தேதியன்று இரண்டு இனங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய அச்சம்பவம் குறித்து சற்று வரலாற்றுப் பின்னணியோடு அலசிப் பார்த்தால் தான் உண்மைச் செய்தி வெளிவரும். இல்லையென்றால் வலிமையான ஊடகங்களை வைத்திருப்போர் சொல்வதே உண்மையாகிவிடும். சீன அரசு கொடுக்கின்ற செய்திகளைத்தான் உலக பத்திரிக்கைகளும் வெளியிட்டு வருகின்றன. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டத்தை சீன அரசு தீட்டி வருகிறது என்ற செய்தி பின்புறம் ஒளிந்துள்ளதை எந்த ஏடுகளும் வெளிக்காட்டவில்லை.

சீனாவில் இஸ்லாம் அறிமுகம்:
கி.பி. 650 இல் உதுமான் (ரலி) அவர்களின் இஸ்லாமிய அரசின் போது உலகில் மிகப்பெரும் பேரரசுகளின் ஒன்றான சீனாவிற்கு ஸஅத் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தூதராக அனுப்பப்பட்டார்கள். தான் ஏற்கனவே வந்துயிருந்தாலும் அரபு வணிகர்களின் அழைப்புப் பனியின் காரணமாக சீனாவின் பல பாகங்களிலும் இஸ்லாம் ஆழமாக வேருர்று இருந்ததை கண்டார்கள். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒருங்கிணைத்து இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கிடும் விதமாக டாங் பேரரசின் மன்னர் குவாசானகிடம் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கான அனுமதி கேட்டு “கேன்டன்” நகரில் அன்றைக்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் தான் இன்றைக்கும் அந்நகரில் உள்ளது.

அதன் பிறகு அப்பாஸியாக்கள் உமையாக்கள் காலத்திலும் சீனாவோடும் டாங் பேரரசோடும் முஸ்லிம்களுக்கு மிக நெருக்கமான நட்பும் வியாபார தொடர்புகளும் இருந்தன. அன்றைய உலகின் மிகப் பெரிய வியாபார கேந்திரமாக விளங்கிய “சில்க்ரோடு” என்ற பகுதியில் வியாபாரம் செழிப்பாக நடைபெற்றது. ஐரோப்பா, அரபுநாடுகள், மத்திய ஆசியா மற்றும் சீனா வரையிலான வியாபாரத் தொடர்புகளுக்கு முக்கியக் கேந்திரமாக சீனாவில் தற்போது பிரச்சனைக்குள்ளாகி இருக்கும் இந்த சிங்ஜியாங் பகுதிதான் இருந்தது.

1949 வரை சுயாட்சி பெற்ற தனிநாடாக சோவியத் யூனியனின் ஆதரவோடு கிழக்கு துருக்கிஸ்தான் என்ற பெயரில் விளங்கி வந்தது இன்றைய சிங்ஜியாங் மாகாணம். 1949ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மூலம் சிங்ஜியாங் பகுதியை தன்னோடு இணைத்துக் கொண்டது சீன குடியரசு. இந்த இணைப்பை ஏற்காத சிங்ஜியாங் மக்கள் சீன குடியரசின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அன்றிலிருந்து இன்று வரை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற பெயரில் விடுதலைக்காக போராடி வருகிறது.

மோதலுக்கான காரணம்:
1949 ஆம் ஆண்டு கணக்கு படி கிழக்கு துர்கிஸ்தானாக இருந்த சிங்ஜியாங் பகுதியில் துருக்கிக் மொழி பேசும் முஸ்லிம் இனங்களும், மங்கோலிய இன முஸ்லிம்களும், ஈரானிய இன முஸ்லிம்களும், சைனிஸ் ஹாய் இன முஸ்லிம்களுமாக 95 விழுக்காடு முஸ்லிம்கள் தான் இந்த மாகாணத்தில் வாழ்ந்தனர். இதில் உய்குர் இன முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினர்.

சீனாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 40 விழுக்காடும், எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் 60 விழுக்காடும், பருத்தி, கால்நடை வளர்ப்பு, காற்றாலை, கம்பளி, வேளாண்மை என்று சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிங்ஜியாங் மாகாணம் திகழ்கிறது. இப்படிப்பட்ட மண்ணிற்கு சொந்தமான மக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை குறைத்தால் தான் அங்கே உள்ள வளங்களை சுரண்ட முடியும் என்ற காரணத்தால் புதிதாக தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களைப் புறக்கணித்து விட்டு முஸ்லிமல்லாத ஹான் இன மக்களை சிங்ஜியாங் பகுதியில் குடியமர்த்தி அவர்களை பெரும் பதவியில் அமர்த்தியது சீன அரசு.

உய்குர் முஸ்லிம்களிடம் உள்ள கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறனை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உய்குர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்ஜியாங் பகுதியில் தொடங்காமல் மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி இந்த மக்களை சிங்ஜியாங் மாகாணத்திலிருந்து மத்திய சீனாவிற்கு வேலை தேடி புலம் பெயர செய்தது சீனா அரசு. சூழ்ச்சியை அறியாத உய்குர் முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் வேலை தேடி புலம் பெயர்ந்தனர்.

1947ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 95 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள் 2004 கணக்கெடுப்புபடி 45 விழுக்காடாகவும், ஹான் இனத்தவர் 45 விழுக்காடாகவும் மாறிப்போயினர்.

வேலை தேடி சீனாவின் மத்திய மாகாணத்திற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக ஏறக்குறைய ஒரு லட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிற்கு வந்தபோது தான் சிங்ஜியாங் மாகாணத்தில் எல்லா முக்கிய பொறுப்புகளிலும் ஹான் இனத்தவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பற்று வறுமையில் மண்ணின் மைந்தர்கள் வாட, மறுபக்கம் அவர்களின் வளங்களை எல்லாம் ஹான் இனத்தவர் சுரண்ட,  இரு சமூகத்தாருக்கும் சம வாய்ப்பளிக்கவேண்டிய சீன கம்யூனிஸ்டு அரசு ஹான் இனத்தவர் பக்கம் ஒரு தலைபட்சமாக நடக்க, மோதல் முற்றி கலவரமாகி உயிர்பலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திகள் எல்லாம் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை.

பாலஸ்தீனத்தில் அரபு மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து யூதர்களை குடியமர்த்தி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது போல, சீன அரசு மண்ணின் மைந்தர்களைப் புலம் பெயர செய்து பிற இன மக்களை குடியமர்த்தி வளங்களை தேசியம் என்ற பெயரால் சுரண்டி வருகிறது. போதாக் குறைக்கு உய்குர் மக்களின் மொழியான துருக்கிக் என்ற அரபி வரி வடிவம் கொண்ட மொழியையும் சிதைத்து அவர்களது கலாச்சாரத்தையும் சிதைத்து வருகிறது. தொடர்ந்து சீன அரசிற்கு எதிராக புரட்சிகள் சிங்ஜியாங் பகுதியில் நடைபெற்று வருகின்றன.  இன்ஷாஅல்லாஹ் அது ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும்!.


         நமது பிள்ளைகளுக்கு இது போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அக்கரமங்களையும் செல்லி நேர்மையான இஸ்லாமிய அரசியல் முறைகளை செல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, July 3, 2015

திருகுர்ஆன் தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்:

       பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 7 நூற்றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதையடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.

      இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி:
      தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். 1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார்.

     1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘அல்பகரா’ அத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் சில மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று ‘தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்’ என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள்.

2. ஜான் டிரஸ்ட்:
     அடுத்து சென்னை டாக்டர் எஸ். முஹம்மத் ஜான் அவர்களால் 1983ல் ‘குர்ஆன் மஜீத்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஜான் டிரஸ்ட் இந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    ஆங்கிலத்தில் வெளிவந்த யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கம்பம் மௌலவி, ஸதக்கத்துல்லாஹ் பாகவி, எம். அப்துல் வஹ்ஹாப் M.A. Bth ஆகியோரின் ஒத்துழைப்பால் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. 

3. அஹ்மதிய்யா மொழிபெயர்ப்பு:
      ‘திருக்குர்ஆன் (அரபி மூலத்துடன் தமிழாக்கம்)’ என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு இங்கிலாந்து ‘இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தில் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியானது. இது அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் எழுதிய ‘தஃப்சீர் ஸஃகீர்’ எனும் உர்து விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு மௌலவி, முஹம்மத் அலி என்பவரால் எழுதப்பட்டது.

4. திரீயெம் பிரிண்டர்ஸ்:
       ‘குர்ஆன் தர்ஜமா’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு திரீயெம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தாரால் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று வெளியானது. மௌலானா, M.அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th மௌலானா, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ உள்ளிட்ட அறிஞர்களால் இந்த மொழி பெயர்ப்பு எழுதப்பட்டது.

5. சஊதி மொழிபெயர்ப்பு:
      சஊதி அரபிய்யா அரசாங்கம் சார்பாக ‘சங்கை மிக்க குர்ஆன்’ எனும் பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இந்த மொழி பெயர்ப்புப் பணியை மௌலவி, ரி. முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தலைமையில் இலங்கை மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. இது ஓர் இலவச வெளியீடாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்[IFT]:
      மௌலானா, சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் உர்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் அமைப்பால் 1996ஆம் ஆண்டு ‘திருக்குர்ஆன் (மூலம், தமிழாக்கம், விளக்கவுரை)’ என்ற பெயரில் அழகான தமிழில் திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியானது.

     சரளமான நடை, நல்ல தமிழ், அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னுரை, அடிக்குடிப்பு விளக்கம் ஆகியவற்றால் இந்த மொழிபெயர்ப்புத் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

7. பஷாரத் பப்ளிஷர்ஸ்:
     சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். இதை திண்டுக்கல் மௌலவி, அ. சிராஜுத்தீன் நூரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்ற பின்னணி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

8. மூன் பப்ளிகேஷன்ஸ்:
     2002 டிசம்பரில் சென்னை மூன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார், ‘திருக்குர்ஆன்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். மௌலவி, பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதியுள்ள இந்த மொழிபெயர்ப்பு 400 விளக்கக் குறிப்புகளுடன் அமைந்துள்ளது. 

     இவையன்றி திருச்சியிலிருந்து பேராசிரியர், பா. தாவூத் ஷா அவர்கள் எழுதி வெளியிட்ட ஒரு தமிழ் பெயர்ப்பும்  வந்துள்ளது.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.