Friday, January 15, 2016

பிரான்சால் பாராட்டப்பட்ட ஜிஹாதி

          19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி!  ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல.

        “அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் 1808 ஆம் ஆண்டு பிறந்து இளம் வயதிலேயே அல்-குரானை மனனம் செய்து இஸ்லாமியக் கல்வியையும் கற்ற மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். 1825 ஆம் ஆண்டு மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டுவிட்டு, பல்வேறு அரபு நாடுகளில் பிரயாணம் செய்து விட்டு பல வருடங்கள் கழித்து நாடு திரும்பிய போது தனது தாய்நாடான அல்ஜீரியாவை பிரஞ்சுப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. இன்று உலகில் நல்லவர்கள் என்பது போல் காட்டிக்கொள்ளும் ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும் உலகம் முழுவதும் நிகழ்த்திய கொடூரங்கள் எண்ணிலடங்காதவை.

            வெறும் 22 வயதில் ஆக்கிரமிப்புக்கு எதிராக களம் இறங்கினார் அப்துல் காதிர். போர்க்களில் அனுபவம் ஏதுமின்றி களத்தில் குதித்து வல்லரசுகளில் ஒன்றான பிரான்சை எதிர்த்துப் போரிடும் சாதாரண பணியில்லை. ஆனாலும் உறுதி பூண்டார், களம் கண்டார்,  தனித்தனி குழுவாக இருந்த அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு படையை அமைத்தார். இதுவே அவர்களின் முதல் வெற்றி !!!

              1842 வரை தொடர்ந்த தாக்குதல்களில் சில இடங்களில் இவரது படைகளும் சில இடங்களில் பிரஞ்சுப் படைகள் வெற்றி பெற்றன. பிரஞ்சுப் படைகள் நிறைய இடங்களில் சமாதான உடன்படிக்கைகளை மீறி தாக்குதல் நடந்தியது.

                நவீன ஆயுதங்களும், பணபலமும், படைபலமும் கொண்ட ஒரு வல்லரசை எதிர்த்து எத்தனைநாள் பழங்குடிகளால் தாக்குப் பிடிக்க முடியும்? பிறகு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் காதிர். பின்னர் பிரான்சுக்கும், பிறகு அங்கிருந்து டமாஸ்கஸ் நகருக்கு நாடு கடத்தப்பட்டார். அல்ஜீரியா பிரஞ்சின் காலனி நாடு ஆனது.

             அரேபியக் கைதிகளின் உடல்களைச் சிதைப்பது, பழங்குடிக் குழுக்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிவது, ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை உயிருடன் எரிப்பது என்று பிரான்ஸ் தனது அழிச்சாட்டியத்தை காட்டியது. ஆனால் இஸ்லாமிய போர் நெறிமுறைகளைப் சரிவரப் பின்பற்றிய  அமீர் தனது எதிரிகளைப் போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்ளாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இவ்வளவு ஏன், ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் வந்தபோது தன்னிடம் கைதிகளாக உள்ள பிரஞ்சுப் படை வீரர்களுக்கு தன்னால் உணவளிக்க முடியாமல் போனபோது அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து விட்டார். அதற்கு முன்னரோ பின்போ போரில் நடக்காத இந்த அரிய நிகழ்வை வரலாறு இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளது.

              1841 ஆம் ஆண்டு அப்துல் காதிரிடம் இருந்த பிரஞ்சுக் கைதி ஒருவரை விடுதலை செய்யக் கோரி அல்ஜீரிய பிஷப் எழுதிய கடிதத்தில் ”என்னை உங்களுக்குத் தெரியாது. எனது இறைப் பணி என்பது கடவுளுக்கு பணிவிடை செய்வதும் எல்லா மனிதர்களையும் சகோதர்களாக  நேசிப்பதும் தான். என்னிடம் தருவதற்கு பணமோ தங்கமோ இல்லை “கருணையுள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற விவிலிய வாக்கியத்துடன் நிறைவடைந்த கடிதத்துக்கு அமீர் இப்படி பதில் எழுதினார்.

                    சிறைபட்டிருக்கும் ஒரு கிருஸ்த்தவரின் விடுதலையை மட்டுமே நீங்கள் கோரி இருக்கக் கூடாது. எல்லா கிருஸ்த்தவர்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கோரி இருக்க வேண்டும். அதே போன்று பிரஞ்சு ராணுவத்தால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களையும் விடுவிக்குமாறு நீங்கள் கூறி இருந்தால், உங்கள் இறைப்பணி இன்னும் இருமடங்கு பலனுள்ளதாய் ஆகி இருக்குமே. விவிலியத்தில் தானே இதுவும் இருக்கிறது ”மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதனை நீ அவர்களுக்குச் செய்” என்று முடித்திருந்தார்.

            இந்த வீரர்களை மீட்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருந்த வேளையில் பிரஞ்சு தளபதிகள் முதல் முதலாக அப்துல் காதிர் அவர்களை நேரில் கண்டு அவரது எளிமையைக் கண்டு வியந்து போனார்கள். டமாஸ்கசுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னால் அமீரை சந்தித்த நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நன்றிகளை அவருக்குத் தெரிவித்தார்கள். அவர்களில் அப்துல் காதிர் அவர்களிடம் கைதியாகப் பிடிபட்டு நல்ல முறையில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் உண்டு.

             நாடுகடத்தப்பட்டு டமாஸ்கஸ் நகரில்  வாழ்ந்து கொண்டிருந்த அப்துல் காதிர் அங்கும் சில சவால்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. 1860 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசின் அப்போதைய கவர்னராக இருந்த உமர் பாஷாவின் ஆளுகையில் இருந்த ஷியாக்களில்  ஒரு பிரிவினரான “துருஸே முஸ்லிம்கள்” கிறித்தவர்களை தாக்கினார்கள். அநியாயமாக எந்தக் கிறித்தவனும் கொலை செய்யப்படுவதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று அறிவித்த அப்துல் காதிர் ஒரு படையை திரட்டி கிறித்தவர்களை பாதுகாக்கும் பணியில் இறங்கினார்.

                    தனது நாட்டை அடிமைப்படுத்தி, தன்னை போரில் தோற்கடித்து சிறையில் அடைத்து நாடு கடத்தியவர்கள் தானே என்று பார்க்காமல் நியாயத்துக்கு குரல் கொடுத்தார். உதுமானியப் பேரரசின் அரசருக்கு தகவல் அனுப்பினார். படை திரட்டி 12,000 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களைக் காப்பாற்றி ”Citadel of Damascus” என்ற கோட்டையில் அவர்களைத் தங்க வைத்து பாதுகாத்தார். உலகம் முழுவதும் பரவிய இந்தத் தகவலில் நெகிழ்ந்துபோனார்கள் கிறித்தவர்கள். கூனிக் குறுகிப் போனது பிரஞ்சு அரசாங்கம். அவரது மனித நேய நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கில் மக்களை பாதுகாப்பாய் இடம் பெயர்த்த ஜிஹாதுக்காக பிரஞ்சு அரசின் மிக உயரிய விருதான  Grand Cross of the Légion d’honneur  அவருக்கு அறிவிக்கப்பட்டது.

             தங்களுக்கு எதிராகப் போர் தொடுத்து தங்களால் நாடு கடத்தப்பட்ட ஒருவருக்கே தனது நாட்டின் உயரிய விருதை வழங்கும் நிகழ்வு வரலாற்றில் மிக அரிதே. அது இங்கே நடந்தது. காட்டுத்தீயெனப் பரவிய இந்த சம்பவம் அமெரிக்காவை வந்தடைந்தது. ஒரு முஸ்லிம் கிறித்தவர்களின் உயிருக்காக ஜிஹாத் செய்தாரா? என்று நம்ப முடியாமல் கேட்டார் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.

         பாராட்டுக் கடிதமும்  சில துப்பாக்கிகளும் அன்பளிப்பாக லின்கனிடமிருந்து அனுப்பப்பட்டது. இன்றும் அந்தத் துப்பாகிகள் அல்ஜீரிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றார்கள். அயோவா மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரத்துக்கு “Elkader” அப்துல் காதிரின் பெயர் சூட்டப்பட்டது.

              அரபுப் பெயர் கொண்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் சந்தேகப் பார்வை பார்க்கப்பட்டு தனிச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில், எங்கோ நீதிக்காய்ப் போராடிய ஒரு விரரின் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தானே !!!

       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவரைபோன்ற இஸ்லாமிய மார்க்கத்தையும், இஸ்லாமிய போர் நெறிமுறைகளையும் பேணி காத்த பல இஸ்லாமிய சுல்தான்கள், அரசர்கள் வரலாற்றில் உள்ளனர். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, January 1, 2016

கருப்பு தங்கம் மான்ஸா மூஸா (கி.பி 1280-1337)

        14 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தன் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பின்பற்றி வாழ்ந்து, மாலி பேரரசின் மாபெரும் அரசராக திகழ்ந்து “கருப்பு தங்கமான” மான்ஸா மூஸா உலகையே தன் வசம் ஈர்த்தார்.

    ஆப்ரிக்க கண்ட வரலாற்றில் மாபெரும் பேரரசு என்றால், அதுவும் அறிவுப் பேரரசு என்றால் அது மான்ஸா மூஸா ஆண்ட அந்த 25 ஆண்டுகால மாலிப் பேரரசுதான். ஆயிரக்கணக்கான தங்க சுரங்கங்களை கொண்ட மாலியின் ஆட்சியாளரான இவர் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுந்த பிடிப்பும், பேணுதலும் உடையவராக இருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தன் வாழ்நாளில் அல்லாஹ்வுடைய தூது செய்தியான இஸ்லாத்தை இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும், மாலியை இந்த உலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

     இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும், மாலிப் பேரரசின் மீதும், உலகத்தின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற தீராத தாகத்தோடு காத்திருந்த மான்ஸா மூஸாவுக்கு ஒரு பொன்னான சிந்தனை தோன்றியது. கி.பி 1324 ஆம் ஆண்டிற்கான ஹஜ்ஜை பயன்படுத்தினார், மாலியில் ஹஜ் பயணக் கூட்டம் தயாராகி நின்றது. மான்ஸா மூஸா முதலில் ஒட்டகத்தில் அமர, அவருக்குப் பின்னால் 60,000 மக்கள் உயர்தரமான ஆடைகள் அணிந்து நின்றனர். மேலும் 60 ஒட்டகங்களில் 2000 கிலோ தங்கக் கட்டிகள், 300 பவுண்ட் எடை கொண்ட சுத்திகரிக்கப்படாத தங்கக் துகள்கள், 12 ஆயிரம் பணியாளர்கள் என்று ஒரு பெரும் நகரமே புனித மக்கா நோக்கி நகர்ந்து வரத் துவங்கியது.

            மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிநின்று மான்ஸா மூஸா அவர்களின் ஹஜ் பயணக் குழுவை வியந்து பார்த்தனர். செல்லுகின்ற வழியெல்லாம் வாழ்ந்த மக்களுக்கு இவர் தங்கக் கட்டிகளையும், தங்கக் துகள்களை இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தார். வழியில் எந்த எந்த ஊரில் கூடாரம் அமைத்து தங்கினார்களோ அங்கேயெல்லாம் அல்லாஹ்வை வணங்கிட மஸ்ஜிதை கட்டினார். எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இவர் அள்ளிக் கொடுத்த தங்கத்திற்கு அளவே இல்லை. இப்படி இலவசமாக வாரி இறைத்த தங்கத்தினால் அடுத்த 13 ஆண்டுகளுக்கு மேல் எகிப்தில் தங்கத்திற்கு மதிப்பு இல்லாமல் போய் மக்கள் தங்கத்தை வெறுக்கும் அளவிற்கு போனதாம்.

      இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், அவர் வாரி வழங்கிய தங்கம் குறித்தும் தான் உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. ஆப்பிரிக்காவே அதிர்ந்தது, ஐரோப்பா ஆச்சரியத்தில் மூழ்கியது. இஸ்லாமிய உலகமே இவருடைய ஹஜ் பயணத்தை பார்ந்து வியந்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வணிகர்கள் மாலியில் குவிந்தனர். மாலியில் வியாபாரம் பெரும் அளவில் பெருகத் துவங்கியது. 

      மாலிப் பேரரசை இஸ்லாமியக் கல்வியில் மிக உயர்ந்த பீடமாக உருவாக்க வேண்டும் என்ற வேட்கையில் மக்காவிலிருந்து திருப்பும் போது இஸ்லாமிய உலகின் தலை சிறந்த கல்வியாளர்களையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் மாலிக்கு அழைத்து வந்து, திம்புக்த்து நகரில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு உத்தரவிட்டார். அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகம் தான் “ஜாமியா திம்புக்த்து” என்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம்.

      பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றும் மதரஷா பட்டதாரிகள் 5 வேளை தொழுகையை மட்டும் நிறைவேற்றி விட்டு மிகுதியான நேரத்தை வீணாக்குவதை கண்டார், பெரும் எண்ணிக்கையிலான மனித ஆற்றல் மற்றும் அறிவாற்றல் வினாகுவதை உணர்ந்தார். இமாம்கள் எஞ்சிய நேரத்தை பயனுள்ள வகையில் நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேன்மைக்கும் பயன்படுத்திட வேண்டும் என்று மூஸா அவர்கள் முடிவு செய்தார்.

     மாலிப் பேரரசு முழுவதும் உள்ள சிறிய அளவிலான குர்ஆன்  பாடசாலைகளை இணைத்து ஒரே பாடத் திட்டமாக, ஒரே பயிற்றுவிப்பு மற்றும் ஒரே கால அளவு முறையாக முதலில் மாற்றி அமைத்து, அதை உயர் கல்வி நிறுவனமான ஜாமியா திம்புக்த்துவில் இணைத்து முஸ்லிம்களின் உயர் கல்வியை வலிமையானதாக, உலகை வெல்லும் கல்வி முறையாக மாற்றினார். இதன் மூலம் மாலிப் பேரரசுலிருந்து  அறிவும் ஆற்றலும் பொருந்திய சமூக, அறிவியல், தொழில்நுட்ப, விஞ்ஞானிகளை உருவாக்கிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி, இதற்காகவே ஜாமியாவின் பாடத் திட்டங்களை உலகத் தரத்திற்கு மாற்றி அமைத்தார்.
    
   இவருடைய திட்டத்தால் உலகம் முழுவதும் ஜாமியா திம்புக்த்துவின் கல்வித்திறன் எதிரொலித்தது. உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் மாலிப் பேரரசின் திம்புக்த்து நகர் நோக்கி கல்வி பயில வந்தனர். அவர் அன்று ஏற்படுத்திய புரச்சி இன்றைக்கும் மாலி என்றாலே “ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய கல்வியின் தலைமை பீடம்” என்று வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது.

      கி.பி 1330 இல் ஒரு இலட்சம் மக்கள் தொகை கொண்ட திம்புக்த்து நகரில் அமைத்திருந்த ஜாமியாவில் 25,௦௦௦ மாணவர்கள் கல்வி பயின்றார்கள். இப்பொழுதும் ஜாமியா திம்புக்த்து பெயல்பட்டு வருகிறது. அவர் மரணித்து 7௦௦ ஆண்டுகள் கடந்த போதிலும் மாலி என்றாலே இஸ்லாத்துடன் இணைந்த தொழிற்கல்வியின் தலைமைபீடம் என்று ஆப்ரிக்க மக்கள் தங்களது தங்கத் தலைவனைப் போற்றிக் புகழ்கின்றனர். இவரால் உயிரூட்டப்பட்ட மாலியின் வளர்ச்சி பணிகள் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் அடுத்து வந்த 150 ஆண்டுகளுக்கு மாலியை ஆப்பிரிக்காவின் தலைமை பீடமாக மாற்றியது.

     மான்ஸ மூஸா மரணித்து 12 ஆண்டுகள் கழித்து மாலிக்கு சென்ற உலகை சுற்றிய கடல் பயணி “இப்னு பதூதா”  தனது பயணக் குறிப்பில் “வலிமையான ஆட்சியாளராகவும், வளமிக்க நாட்டின் அதிபாராகவும், எதிரிகள் கண்டு நடுங்கிய மாவிரனாகவும், இறை பக்கியும், ஈகை குணமும் உடைய மனித நேயராக வாழ்ந்துள்ளார் மான்ஸ மூஸா. இவர் ஆட்சியில் மாலி முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு, உயந்த நீதி கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் கூட இவ்வுலகில் வாழ்ந்த பெரும் பானக்காரர்களில் இவரே முதலிடம்.


       நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய அரசியல் முறையும் சொல்லி வளர்ப்போம். இவர்களுடைய வரலாறுகள் படிக்காமல் தேவையில்லாத மக்களுடைய வரலாறுகள் படிப்பது நமது நேரத்தை வீனாக்குவதற்கு சமம். இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!