Monday, February 16, 2015

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்

அஸ்ஸலாம் அழைக்கும் வரஹ்...

         இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

         மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய  குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

        பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்தியது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.

        எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கூறினார்கள். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

        வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள “உல்விச்” அருங்காட்சியகத்தில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

       இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும், திப்புவின் ராக்கெட் 2.2Kg முதல் 5.5Kg வரை இருந்தது என்றும். இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள், இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது என்றும், ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி:
        இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது “அக்கினிச் சிறகுகள்” நூலில் விவரித்துள்ளார்.

        ''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள்.

        அந்த ஓவியத்தின் திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.

Monday, February 2, 2015

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார் (கி.பி 1862 - கி.பி 1931)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

         தனது 16ம் வயதில் தந்தையை இழந்த இவர் தனது மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து. பிறகு குர்ஆன் ஓதிகொடுக்கும் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் 1912கலில் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைப்பற்றி தனது இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியாவை வைத்தது.

         இதனை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்த்து இயக்கம் நடத்தி அதன் தலைவராக இருந்தார். இவர் தன் இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, வீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்து வந்தார்.

         இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே தொடர்த்து போர் நடந்தது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்துருந்த உமர் முஃக்தார் அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர் புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு  ஆசிரியராக இருந்தபோதிலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர் தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். இதுவே உலகின் முதல் கொரில்லா படை தாக்குதல் என்று கூறப்படுகிறது..

         கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல்கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் போராடினார்கள். இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக்கூடாது என்ற வெறியும், உமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

         பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக “பெனிட்டோ” முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.

         உமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும்படி வற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இறுதியில் இத்தாலியப் படைகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

         இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி,  சர்வதேச விதி முறைகளையும் மீறி,  அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 70 (எழுவது). சிறையில் சிறை அதிகாரி இவரிடம் “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ”ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும், அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

         உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் “உமர் முக்தார்” என்ற பெயரில் 1980களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

         நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற போராளிகளின் வரலாறுகள் சொல்லி வளர்ப்போம்.. இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!