Friday, October 16, 2015

யார் இந்த வஹ்ஹாபிகள்? முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) (கி.பி 1702 -1792)

 இஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே (ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அவர்கள் பிறந்த காலப்பகுதி இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்கள் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

கப்றுகளை, குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததோடு மார்க்க அறிஞரான தனது தந்தையிடம் சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டார்கள்.

தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய சென்ற போது அங்கே ஒரு நிகழ்வை காண்கிறார். நான்கு மத்ஹபுகளுக்கும் தனி தனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு (ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹம்பலி)  தடவை நிறைவேற்றப்பட்டன. அத்துடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும், ஹதீஜா (ரலி) அவர்களுக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன.

கல்வி கற்பதற்காக மதீனாவுக்கு சென்று சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கும், ஈராக்கிற்க்கும், லக்‌ஷா (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள். இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார்கள்.
  
தனது 25ஆவது வயதில் கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தை உயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத் (நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.

சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிருந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம், என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள்.

அதேபோன்று இறைவழியில் வீரமரணம் அடைந்த ஸாயித் இப்னு கத்தாப், மிரர் இப்னு அஸ்வர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி வணங்கிக் கொண்டிருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீருடைய 600 படைவீரர்களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாகளை உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள்.

இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சில காரணங்களால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல். அந்த ஆட்சியாளர், இமாமை பாதுகாப்புடன் அனுப்பிவைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அப்துல் வஹ்ஹாப்பை பற்றி கேள்விப்பட்ட இவர் அவரை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள் என்றதும் மன்னரும் அதற்கு சரி நான் உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

      இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய அனுமதி கொடுத்தார். ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடந்தது.

முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே சென்றார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, மக்களை எகத்துவ கொள்கையின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்தி முழு அரேபியாவிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது. சஹாபாக்கள் காலத்தில் எவ்வாறு இஸ்லாம் வேகமாக வளர்ச்சி பெற்றதோ அதுபோல் இமாமவர்களின் காலக்கட்டத்திலும் தூய இஸ்லாம் எழுச்சி பெற்றது. இறுதியாக, ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.

வஹ்ஹாபிய வளர்ச்சியை கண்ட அன்றைய வல்லரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், துருக்கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

 துருக்கிய ஆட்சியாளரும் அதனை ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்..

சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர் – ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்என்று எழுதுகிறார்.


இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Friday, October 2, 2015

அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா. (கி.பி 1263- கி.பி 1328)

  மாபெரும் மார்க்க மேதையும், சீர்திருத்தவாதியுமான இவர் ஹிஜ்ரி 661ல் சிரியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இமாமாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார்.

இவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்லஎன்று போற்றுகின்றார்.

கி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர் வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற் சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சிஎன்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.

அப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். பித்அத்என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்கெதிரான பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார்.

ஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும் கௌரவித்தனர்.

எகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று வியந்தார் காஸான்.

யூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். கற்பாறைக்கு மக்கள் தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர் கல்வெட்டும் தொழிலாளர் அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணி கட்டினார். மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன் அவர்கள் மீது போர் மேற்கொண்டார்.

இவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம் துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள் ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர் முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபோதும் இவர் பின்வாங்கவே இல்லை. இருப்பினும் எதிரிகளின் சூழ்சியால் இவரையும் இவரது சகோதரர்களையும் சிறையில் தள்ளப்பட்டனர்.

சிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின் மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர் கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்துவம் இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார். சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத் தம் கொள்கையை ஏற்குமாறு செய்தார்.

ஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ வரவழைத்து இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக கூறிய போது அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம் அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத் தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத் துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலிருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி (ஸல்) அவர்களுடைய கப்றுக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

   திமிஷ்கில் இவர் சிறையில் தள்ளப்பட்டபோது இவரது சகோதரர் அப்துர்ரஹமான், இவரது மாணவர் ஹாபிள் இப்னு கைய்யூமும் உடனிருந்தனர். சிறையில் வைத்து இவர் எழுதியவை யாவும் பிரதி செய்யப்பட்டு நாடு முழுவதும் பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம் அவையாவையும் பறிமுதல் செய்தது. ஆனால் இவரோ அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது தமக்குக் கிடைத்த காகிதங்களில் தமது கருத்துகளை கரிதுண்டால் எழுதி வந்தார். இப்போராட்டத்தை இவர் ஒரு ஜிஹாத் என்றே கருதினார்.

சிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.

இவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா, (மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா. தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!