Saturday, July 16, 2016

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்

       திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

    அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்:
  திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், வசனங்களுக்கான நீண்ட விளக்கவுரைகள் (தஃப்சீர்) அரபி மொழியில் ஏராளமாக உள்ளன. அவற்றில் தஃப்சீர் தபரீ, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் கபீர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் அல்ஜவாஹிர், தஃப்சீர் அல்மனார் ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும். அரபியல்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் வெளிவந்துள்ளன.

   தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகள் சமீப காலத்தில் தான் வெளிவந்தன. உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்சீரில் குர்ஆனில் மஜீத்’ எனும் பெயரில் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். ‘ரூஹுல் பயான்’ எனும் அரபி விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த விரிவுரை 1937ஆம் ஆண்டு தொடங்கி, 1961வரை 7 பாகங்களில் வெளிவந்தது.
அன்வாருல் குர்ஆன்கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் 1955ஆம் ஆண்டு முதல் ‘அன்வாருல் குர்ஆன்’ எனும் தமிழ் விரிவுரையை வெளியிட்டார்கள். தென்காசி மௌலானா, இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதிய இந்த விரிவுரை, குர்ஆனின் 30 பாகங்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளில் வெளிவந்து நிறைவடைந்தது.

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்
    வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு முதல் ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் விளக்கவுரை ஒன்றை தமிழில் வெளியிட்டுவருகிறது. பாக்கியாத் பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் இந்த விரிவுரையை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகின்றனர். கைக்கு அடக்கமான வடிவில் இதுவரை 5 தொகுதிகள் வெளி வந்துள்ளன. கல்லூரி நிர்வாகம் இந்த விளக்கவுரையை முழுமையாக வெளியிடுவதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது.

தஃப்சீர் இப்னு கஸீர்
    சிரியா நாட்டைச் சேர்ந்த இமாம் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 700-774; கி.பி. 1300-1372) அரபி மொழியில் எழுதிய முதல் தரமான திருக்குர்ஆன் விரிவுரையே ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ என அறியப்படுகிறது. நான்கு பாகங்களில் வெளிவந்த இந்த விரிவுரையை பேராசிரியர் முஹம்மத் அலீ அஸ்ஸாபூனி அவர்கள் மூன்று பாகங்களில் சுருக்கித் தந்துள்ளார்.

      இந்தச் சுருக்கப் பதிப்பைத் தமிழில் கொண்டு வரும் பெரு முயற்சியில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மொத்தம் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு, முதலாவது பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

      வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி தலைமையில் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று இத்திருப்பணியை மேற்கொண்டுள்ளது.

   இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.

Friday, July 1, 2016

சமூகத்தை உயர்த்த அறிவாற்றலுடன் களமிறங்குவோம்!

    உலக வரலாற்றில் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை பலவிதமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தே வந்துள்ளது. பலநூறு ஆண்டுகளாக தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டு தங்கள் போக்கை மாற்றிக் கொண்டனர்.

   அதே போல வரலாறு முழுவதும் வேட்டையாடப்பட்ட யூதர்கள் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களின் நிலத்தை அபகரித்து தங்களுக்காக ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டனர். அதே போல மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக நடத்தப்பட்ட தலித் சமூகம் அம்பேத்கர், தந்தைபெரியார் போன்றோர் வழிகாட்டபட்டதின் விளைவாக இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டுகளுக்குள் அவர்கள் இந்திய அரசுத் துறையின் அனைத்துப் பொறுப்புகளிலும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

  ஆனால் வரலாறு முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்த நமது முஸ்லிம் சமூதாயம் 1857 க்குப் பிறகான பிரிட்டிஷ் ஆட்சியிலும் பிறகு 1947 க்குப் பிறகான குடியரசு இந்தியாவிலும் புரந்தள்ளபட்ட மக்களாக மாறிப் போய் விட்டனர். தலித் சமூகத்தைக் காட்டிலும் கீழான நிலையில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தனது ஆய்வரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    முஸ்லிம்களின் இந்த சமூக பின்னடைவை மாற்றுவதற்கு அரசு எந்தவித நிலையான திட்டத்தையும் வகுக்காத நிலையில் முஸ்லிம்களின் வாழ்வை மேம்படுத்திட அவர்களாகவே தங்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களும் அறிவார்ந்த மக்களும் முஸ்லிம்களுக்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் வழிகாட்ட வேண்டும்.

    வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதலை இஸ்லாமிய அடிப்படையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் போது அவற்றை முறையாகப் பின்பற்றும் மக்கள் மட்டுமே வரலாற்றில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக முஸ்லிம் சமூதாயம் அடுத்த 20 ஆண்டுகளில் தங்களது கல்வியிலும், பொருளாதார முறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிகமாக துஆ செய்யுங்கள் என்றும்,அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.