Friday, July 3, 2015

திருகுர்ஆன் தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்:

       பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. 7 நூற்றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதையடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.

      இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி:
      தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். 1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார்.

     1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘அல்பகரா’ அத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் சில மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று ‘தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்’ என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள்.

2. ஜான் டிரஸ்ட்:
     அடுத்து சென்னை டாக்டர் எஸ். முஹம்மத் ஜான் அவர்களால் 1983ல் ‘குர்ஆன் மஜீத்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஜான் டிரஸ்ட் இந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    ஆங்கிலத்தில் வெளிவந்த யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கம்பம் மௌலவி, ஸதக்கத்துல்லாஹ் பாகவி, எம். அப்துல் வஹ்ஹாப் M.A. Bth ஆகியோரின் ஒத்துழைப்பால் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. 

3. அஹ்மதிய்யா மொழிபெயர்ப்பு:
      ‘திருக்குர்ஆன் (அரபி மூலத்துடன் தமிழாக்கம்)’ என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு இங்கிலாந்து ‘இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தில் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியானது. இது அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் எழுதிய ‘தஃப்சீர் ஸஃகீர்’ எனும் உர்து விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு மௌலவி, முஹம்மத் அலி என்பவரால் எழுதப்பட்டது.

4. திரீயெம் பிரிண்டர்ஸ்:
       ‘குர்ஆன் தர்ஜமா’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு திரீயெம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தாரால் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று வெளியானது. மௌலானா, M.அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th மௌலானா, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ உள்ளிட்ட அறிஞர்களால் இந்த மொழி பெயர்ப்பு எழுதப்பட்டது.

5. சஊதி மொழிபெயர்ப்பு:
      சஊதி அரபிய்யா அரசாங்கம் சார்பாக ‘சங்கை மிக்க குர்ஆன்’ எனும் பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இந்த மொழி பெயர்ப்புப் பணியை மௌலவி, ரி. முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தலைமையில் இலங்கை மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. இது ஓர் இலவச வெளியீடாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்[IFT]:
      மௌலானா, சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் உர்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் அமைப்பால் 1996ஆம் ஆண்டு ‘திருக்குர்ஆன் (மூலம், தமிழாக்கம், விளக்கவுரை)’ என்ற பெயரில் அழகான தமிழில் திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியானது.

     சரளமான நடை, நல்ல தமிழ், அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னுரை, அடிக்குடிப்பு விளக்கம் ஆகியவற்றால் இந்த மொழிபெயர்ப்புத் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

7. பஷாரத் பப்ளிஷர்ஸ்:
     சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். இதை திண்டுக்கல் மௌலவி, அ. சிராஜுத்தீன் நூரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்ற பின்னணி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

8. மூன் பப்ளிகேஷன்ஸ்:
     2002 டிசம்பரில் சென்னை மூன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார், ‘திருக்குர்ஆன்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். மௌலவி, பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதியுள்ள இந்த மொழிபெயர்ப்பு 400 விளக்கக் குறிப்புகளுடன் அமைந்துள்ளது. 

     இவையன்றி திருச்சியிலிருந்து பேராசிரியர், பா. தாவூத் ஷா அவர்கள் எழுதி வெளியிட்ட ஒரு தமிழ் பெயர்ப்பும்  வந்துள்ளது.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.

No comments:

Post a Comment