Thursday, June 18, 2015

ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் ( கி.பி.1563 - கி.பி 1624 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

       அக்பரின் மார்க்க விரோதமான ஆட்சி காலத்தில் சிர்ஹிந்த் என்ற ஊரில் கி.பி.1563  பிறந்து தனது தந்தை மூலமாக மார்க்க அறிவுகளை பெற்றதோடு தனது 17 வயதுக்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அத்துடன் தப்சீர் மற்றும் ஹதிஸ் கலையில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தர்க்கம், தத்துவம், இறையியல் போன்ற கலைகளையும் கற்றார். 

                இவர் அக்பரின் மோசமான ஆட்சி காலத்தில், அக்பரின் கண்டு பயந்தவர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

      ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை, மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் “ஷேக் அஹ்மத்” அவர்கள்தான். அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத சரியான மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

      அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு “அஹமத் சிர்ஹிந்த்” அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் “ஷேக் அஹ்மத்” அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வரை மார்க்க கல்வி கற்பதற்காக “ஷேக் அஹ்மத்” அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார். இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.  

      இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது. அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும், சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், எதிர்ப்பு சட்டங்களும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

      ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம், முற்றாக ‘ஜாஹிலியத்தின்’ (அறியாமையின்) கைகளுக்கு மாறுவதை தடுத்தது மட்டுமின்றி, ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

     அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார். ஷரீஅத்தை, மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’  இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார்.

      நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், இவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

No comments:

Post a Comment