Thursday, June 18, 2015

ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த் ( கி.பி.1563 - கி.பி 1624 )

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

       அக்பரின் மார்க்க விரோதமான ஆட்சி காலத்தில் சிர்ஹிந்த் என்ற ஊரில் கி.பி.1563  பிறந்து தனது தந்தை மூலமாக மார்க்க அறிவுகளை பெற்றதோடு தனது 17 வயதுக்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அத்துடன் தப்சீர் மற்றும் ஹதிஸ் கலையில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தர்க்கம், தத்துவம், இறையியல் போன்ற கலைகளையும் கற்றார். 

                இவர் அக்பரின் மோசமான ஆட்சி காலத்தில், அக்பரின் கண்டு பயந்தவர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

      ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை, மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் “ஷேக் அஹ்மத்” அவர்கள்தான். அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத சரியான மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

      அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு “அஹமத் சிர்ஹிந்த்” அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் “ஷேக் அஹ்மத்” அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வரை மார்க்க கல்வி கற்பதற்காக “ஷேக் அஹ்மத்” அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார். இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.  

      இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது. அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும், சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், எதிர்ப்பு சட்டங்களும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

      ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம், முற்றாக ‘ஜாஹிலியத்தின்’ (அறியாமையின்) கைகளுக்கு மாறுவதை தடுத்தது மட்டுமின்றி, ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

     அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார். ஷரீஅத்தை, மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’  இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார்.

      நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், இவர்கள் செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!

Wednesday, June 3, 2015

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

       பெருமானார் நபி (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது. நபி (ஸல்) பின் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். நபி (ஸல்) வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.

      மதீனாவை ஆண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த உமர் (ரலி) அவர்கள், “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?” என்று வினவினார்கள்.
     “உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்” என்றார்.
  “ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும் போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை” என்று உமர் ஆவேசமாக சொன்னார்.

     அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன் என்றார்கள்.

     அப்படியானால் தாங்கள் அரசாங்க கஜானாவிலிருந்து வேலை செய்வதற்கான எந்தப் பயனையும் அனுபவிப்பதில்லையா? என்று உமர் வினவினார்கள்.

      நிச்சயமாக இல்லை. நபி (ஸல்) அவர்கள் அரசாங்க கஜானாவில் இருந்து தன் சுய தேவைக்காக எதனையும் பயன்படுத்துவதில்லை. தனக்கு மட்டுமல்ல, தன் வம்சாவழியினர் அனைவருக்குமே அதை “ஹராம்” என்று தடை செய்திருக்கிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தாத ஒரு வழிமுறையை எப்படி நான் கையாள்வேன்? என்றார் அபூபக்கர் (ரலி).

      பின்னர், இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம் என்றார் உமர். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலி) அவர்களை அணுகினார்கள்.

      விவரங்களைக் கேட்டறிந்த அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் மாதா மாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு சொன்னார்கள். அதோடு ஒரு சிறு தொகையையும் சம்பளமாக அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்.

      அரசாளும் மன்னனாயிருந்தாலும், மதி நுட்பத்தால் ஒரு சாதாரணக் குடிமகன் ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்கிறார் என்றால், அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை வேண்டும் என்பதுதான் நபித்தோழர்கள் கலீபாக்களாய் அரசோச்சிய காலகட்டத்தின் நியதியாய் இருந்தது. அபூபக்கரும் அந்தத் தீர்ப்புக்கு தலைச்சாய்த்தார்.


      சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அன்னாரின் மனைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர் (ரலி) அவர்களின் முன் வைத்தார்கள்.

      ‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள். ‘யாரும் தரவில்லை. நானே தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் மனைவி.

     ‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கேட்டு  கொண்டார்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள். அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். நபித்தோழர்களின் இது போன்ற நன்னடத்தைகள் இஸ்லாமிய ஆட்சியின் இறையாண்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    அபூபக்கர் (ரலி) அவர்கள், தான் மரணிக்கும் தருவாயில் தன்னிடம் அரசாங்கச் சொத்தாய் இருந்த அமரும் ஈச்சம்பாய், உண்பதற்கும், அருந்துவதற்கும் பயன்படுத்திய தோல் துருத்திகள், மரபாண்டங்களை தனக்குப் பின்னால் வரும் கலீஃபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். அவர்களின் பின்னால் அவற்றைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் ‘அபூபக்கர் சரியான முன் மாதிரியை அமைத்துத் தந்துவிட்டார்கள். இனி ஆட்சிக்கு வரும் எவரும் அவர் வகுத்த எளிமையை மீற முடியாது. இப்பொருட்கள் தவிர்த்து எதனையும் நான் பயன்படுத்தமாட்டேன்’ என்றார்கள்.

       இன்ஷாஅல்லாஹ்.. இது போல் ஒரு அழகிய ஆட்சியை அல்லாஹ் இவ்வுலகில் அமைப்பனாக. ஆமின்!!! நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற அரசர்களின் வரலாறுகளையும் , இவர்கள் செய்த சாதனைகளையும், சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்.... இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!